LIMSwiki
உள்ளடக்கம்
துரோணர் மகாபாரதக்கதையில் வரும் கௌரவர், பாண்டவர்களுடைய ஆசான் ஆவார். இவர் போர்க்கலைகளில் மிகவும் தேர்ந்தவர் ஆவார். இவர் பரதுவாஜரின் புதல்வர் ஆவார். இவருடைய மனைவி சதானந்தரின் மகள் கிருபி. அசுவத்தாமன் இவர்களுக்குப் பிறந்த மகன் ஆவான். பிரம்மனிடம் இருந்து இந்திரனுக்குக் கிட்டிய தங்கக் கவசத்தைத் தாமே வாங்கித் துரியோதனனுக்குத் தந்தவர்.[1]
பிறப்பு
பாரத்துவாசர் தனது தவ வலிமையால் உலகமெங்கும் பயணித்து வரும் போது க்ருடசி என்ற கந்தர்வக் கன்னியைக் கண்டார். கண்டவுடன் அவள் மீது காதல் கொண்டார். அந்த கந்தர்வக் கன்னியைக் கண்டு காதல் கொண்ட மாத்திரத்திலேயே அவரிடமிருந்து வெளிப்பட்ட விந்துவை ஒரு பானையில் செலுத்தினார். பானையில் இருந்து பிறந்தார் துரோணர்.[1]
துரோணரின் சபதம்
துரோணர் பரம ஏழை. அவர் வீட்டில் ஒரு பசு மாடுகூட இல்லை. பாலின் ருசிகூட தெரியாமல் வளர்ந்தார் மகன் அசுவத்தாமன். அது மட்டுமின்றி கஞ்சிக்கும் பாலுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல் அவர் வளர்ந்தார். துரோணரின் இளமைக் கால நண்பர் பாஞ்சால நாட்டு அரசர் துருபதனிடம் போய் ஒரு பசுவை வாங்கி வருமாறு கிருபி துரோணரை நச்சரித்தாள். "சிறுவயதில் தன் சொத்துக்கள் எல்லாவற்றையும் என்னோடு பகிர்ந்து கொள்வதாக அவன் சொல்லியிருக்கிறான்" எனக் கூறி துருபதனிடம் சென்று தனது சிறு வயது வாக்குறுதியை நினைவூட்டினார். துருபதன் வாய்விட்டுச் சிரித்தான். "சமமானவர்களுடன் தான் நட்பு வைத்துக்கொள்ள முடியும். நான் செல்வம் மிகுந்த மன்னன்; நீயோ ஏழை முனிவன் நாம் நண்பர்களாக இருக்க முடியாது. நட்பின் அடிப்படையில் பசுவைக் கேட்காதே. தர்மமாக கேள் பசுவை தானமாக தருகிறேன்" என்றார் துருபதன். இதைக் கேட்டதும் துரோணர் வருத்தமும், கோபமும் கொண்டார். "ஒரு நாள் உனக்கு இணையான மன்னனாகி மீண்டும் வருவேன்" என்று சபதம் செய்து பாஞ்சாலத்தை விட்டு வெளியேறினார்.[1]
ஆசான் துரோணர்
போர் வித்தையில் தேர்ந்த ஆசிரியரான பரசுராமனிடம் போய் போர்த் தந்திரங்களைக் கற்றார். என்னுடைய வித்தையை சத்திரியர்களுடன் பகிர்ந்துகொண்டு விடாதே என எச்சரித்தார் பரசுராமர். மாட்டேன் என வாக்குறுதி தந்தார் துரோணர். ஆனால் பரசுராமர் ஆசிரமத்தை விட்டு வெளியே வந்ததுமே வாக்குறுதியை மறந்து அத்தினாபுரம் சென்று குரு வம்சத்திற்கு ஆசானாகி குரு வம்ச சத்திரிய இளைஞர்களை துருபதனுக்கு எதிராகப் பயன்படுத்தத் திட்டமிட்டார்.[1]
துரோணர் அத்தினாபுரம் வந்த போது குரு வம்சத்துப் பிள்ளைகள் கிணற்றிலிருந்து ஒரு பந்தை மீட்பதில் மும்முரமாக இருந்தனர். இராச குமாரர்களுக்கு உதவ நினைத்தார் துரோணர். நீண்ட ஒரு புல்லை எடுத்து கிணற்றில் இருந்த பந்தின் மீது வீசினார். இது பந்தைத் துளைத்து ஒட்டிக்கொண்டது. அடுத்தப் புல்லை எடுத்து ஏற்கனவே பந்தின் மீது ஒட்டியிருந்த புல்லின் மீது வீசினார் புல்லின் மேல் நுனியோடு சேர்ந்து ஒட்டிக்கோண்டது. இப்படியே அடுத்து அடுத்து எடுத்து வீச ஒரு சங்கிலித் தொடரைப் போல கோர்த்துக் கொண்டதும் புல்லை மெதுவாக மேலே இழுத்தார் பந்து மேலே வந்தது. துரோணர் அடுத்து தன் மோதிரத்தை எடுத்து கிணற்றில் வீசினார். அம்பை எடுத்து வில்லில் பூட்டி எய்தார். அம்பு பாய்ந்து சென்று மோதிரத்தைச் சேர்த்து எடுத்துக்கொண்டு மேலே வந்தது. இந்த அதிசயத்தைக் கண்டு திகைத்துப் போன அரச குமாரர்கள் பீஷ்மரிடம் சென்று நடந்ததை கூறினார்கள்.
துரோணரை அழைத்து அரச குமாரர்களுக்கு ஆசானாக நியமித்தார் பீஷ்மர். ஆனால் துரோணர் அரச குமாரர்களுக்கு ஓர் நிபந்தனை விதித்தார். "எனக்கு குரு தட்சணையாக பாஞ்சால மன்னன் துருபதனை உயிரோடு பிடித்துவந்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும்". "அப்படியே ஆகட்டும்" என ஒப்புக்கொண்டனர் அரச குமாரர்கள். கௌரவர்களையும்,பாண்டவர்களையும் துரோணர் சீடர்களாக எற்றுக்கொண்டார். வெகு சீக்கிரத்திலேயே தருமன் ஈட்டி எறிவதிலும், அருச்சுனன் வில் வித்தையிலும், பீமனும், துரியோதனனும்,துச்சாதன்னும் கதை சுழற்றுவதிலும், நகுலன்,சகாதேவன் இருவரும் வாள் வீச்சிலும் தேர்ந்தனர்.
குரு தட்சணை
கௌரவர்களும்,பாண்டவர்களும் போர்க்கலையில் தேர்ச்சி பெற்றனர். துரோணருக்கு குரு தட்சணை கொடுக்க வேண்டிய தருணம் வந்தது. அவர்கள் பாஞ்சாலத்துக்குள் புகுந்து துருபதனின் பசுக்களை எல்லாம் வெளியே விரட்டிவிட்டு துருபதனைப் போருக்கு அழைத்தனர். பசுக்களை மீட்க துருபதன் வெளியே வந்ததும்,"நம் ஆசான் துருபதனை உயிரோடு பிடித்துக்கொண்டு வர பணித்திருப்பதால் அவனது படைகளுடன் போரிட்டு நாம் களைப்படைந்து விடுவோம் "என்று அருச்சுனன் சொன்னதை பாண்டவர்கள் ஏற்றனர். கௌரவர்கள் எப்போதுமே பாண்டவர்களுடன் ஒத்துப் போகாதவர்கள் துருபதனின் படைகளை எதிர்த்து போரிட்டார்கள். அருச்சுனன் தேரில் ஏறிக்கொண்டு தருமரிடம் "நீங்கள் குருநாதரிடம் செல்லுங்கள். நாங்கள் நால்வரும் துருபதனை பிடித்துக்கொண்டு வருகிறோம்" என்றான். பீமன் கதையைச் சுழற்றிக்கொண்டு துருபதனை நோக்கி முன்னேறினான். அருச்சுனனின் தேர்ச் சக்கரங்களைப் பாதுகாத்தபடி நகுலனும்,சகாதேவனும் சென்றனர். கௌரவர்களால் கவனம் சிதறிய துருபதன் அடுத்து யோசிப்பதற்குள் அருச்சுனன் அவன் மீது பாய்ந்து தரையோடு அழுத்திப் பிடித்துக் கொண்டான். பீமன் கயிற்றால் கட்டி தேரில் ஏற்றினான். அவமானத்தால் குன்றியிருந்த துருபதனை துரோணரின் முன் நிறுத்தினர். தன் முன்னே நின்ற துருபதனைப் பார்த்து "உன் நாட்டில் பாதியை என் சீடர்களுக்குத் தந்தால் உன்னை விடுவிப்பார்கள்" என்றார் துரோணர். துருபதன் அதற்கு சம்மதித்தான். "அப்படியானால் பாஞ்சாலத்தில் கங்கையாற்றின் வட பகுதியை கேட்கிறார்கள். உனது ஆட்சி கங்கையின் தெற்கு பகுதியில் மட்டும்தான் என்றார் துரோணர்.[1]
ஏகலைவன்
துரோணர், ஜாதியில் குறைவு கூறி ஏகலைவனை சீடனாக ஏற்க மறுத்ததும், ஏகலைவன் தாமாகவே கற்றுக்கொண்டபின் அவன் அர்ஜுனனுக்கு போட்டியாக இருக்கக்கூடாது என்றும் தமது வார்த்தை பொய் போகக்கூடாது என்றும் கருதி அவனது கட்டை விரலை தட்சிணையாகக் கேட்டதும் துரோணரது குறைபாடு. அஸ்திரசஸ்திரங்களில் நிபுணராக இருந்த துரோணர் ஆத்மகுண நிபுணராக இல்லாததாலேயே துரியோதனன் கட்சியிலிருந்து பாண்டவர்களை எதிர்க்கவேண்டிய தர்மசங்கட நிலை துரோணருக்கு ஏற்பட்டது.[2]
நண்பர்கள்
துருபதனிடம் பெற்ற பாஞ்சாலத்தின் வட பகுதியை துரோணருக்கு குரு தட்சணையாக கொடுத்தனர். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அங்கு நின்ற துருபதனிடம் நான் இப்போது பாஞ்சாலத்தின் ஒரு பாதி நாட்டுக்கு மன்னன், நீ மீதிப் பாதி நாட்டுக்கு மன்னன், நாம் இருவரும் இப்போது சமம், இனி நாம் நண்பர்களாக இருப்போமா"? என்றார். மனதுக்குள் பழி வாங்கும் எண்ணம் இருந்தாலும் துருபதன் அதை ஏற்று சம்மதம் தெரிவித்தான்.[1]
துரோண பர்வம், மகாபாரதம்
மகாபாரதம் இதிகாசத்தில், துரோண பர்வத்தின் குருச்சேத்திரப் போரில், துரோணர் ஐந்து நாட்கள் கௌரவப் படைகளுக்கு தலைமைப் படைத்தலைவராக தலைமை தாங்கி பாண்டவப் படைகளை நிர்மூலம் செய்தார்.
துரோணர் மரணம்
அசுவத்தாமா எனும் இவரது மகன் உயிரோடிருந்த போதே இறந்ததாக துரோணர் கருதும்படி தர்மர், "அசுவத்தாமா ஹத:" என்று சொல்லி பின்னர் கடைசியில் "குஞ்ஜர;" எனும் வார்த்தையைச் சேர்த்தார். கடைசி வார்த்தை காதில் விழாதபடி கிருஷ்ணர் பாஞ்சசன்யத்தை முழக்க; மகன் இறந்ததாக நினைத்து மனமொடிந்து வாழ்வில் விருப்பத்தை விட்டார் துரோணர்.
சத்தியவிரதராக இருந்த காரணத்தால் தரையில் படாமல் நான்கு அங்குலம் மேலே இருந்து வந்த தர்மரின் தேர் பூமியைத் தொட்டது. அதுவரை மற்றவர்களை விட உயர்ந்தவராக இருந்த தர்மர் மற்றவர்களைப் போல் ஆனார்.
அப்போது பீமன், "பிராமணராகிய நீங்கள் குலத்தொழிலை விட்டு போர் புரிய வந்ததால் அரசர்களின் அழிவுக்குக் காரணமாகிவிட்டீர்கள், நீங்கள் இந்தப் பாப வாழ்க்கையில் ஈடுபட நேர்ந்தது சாபக்கேடு" என்று துரோணரைக் குற்றம் சாட்ட, அதனைக் கேட்ட துரோணர் ஆயுதங்களை எறிந்து விட்டுத் தேர்த்தட்டில் ஏறி உட்கார்ந்தபோது, திரௌபதியின் சகோதரர் திருட்டத்துயும்னனால் கொல்லப்பட்டார்.[3]
போருக்குப் பின்னர், துரோணர் மகன் அசுவத்தாமாவால், திருட்டத்துயும்னன் கொல்லப்பட்டார்.